வெள்ளி, 10 செப்டம்பர், 2010

இலங்கை எரித்த தீயே..

சீதை கரங்கொண்டோன் தூதன் அனுமந்தின்
வாலினில் பற்றிய தீ
தூதைப் பழித்திடக் கோபங் கொண்டேயிந்த
தீவை அழித்துநின்றாய்
மாதைத் தமிழ்ச்சிறு மங்கை மானமழித்
தாடிக் குதிப்பவர்கள்
நீதிகேட்டே யவர் நீசர்கள் பூமியை
மீண்டும் எரிப்பாயோ?

ஆளும் மன்னன் கொடுங்கோலன் என்றேநீதி
கேட்க மதுரையிலும்
காலிற் சிலம்புகை கொண்டவள் கண்ணகி
சொல்ல எரித்தொழித்தாய்
பாழு மரசொன்று நீதியின்றிக் கொடுங்
கோல்கொண்டு நிற்குதிங்கு
தீயே மறைந்து நீ நின்றது போதுஞ்
சினங்கொண்டழித்துவிடு

போரில் பகைவென்று பூவையர் கூட்டமாம்
பேசும்தமிழ்க் குலத்து
நேரின்று தாவென்று வாழக்குரலீந்த
வஞ்சியர் தம்மையின்று
வாரி இழுத்தொரு பாசறைக் கூட்டுக்குள்
வைத்துச்சி தைத்தவரை
கீறிக் கிழித்துமெய் கெட்டழித்துக்
கூத்தாடுது பேய்களின்று

வந்தே யெரித்து ஒழித்துவிடு அந்தவன்மை
மனங்களெல்லாம்
வெந்த மனங்களின் பேய்பிடித்தபுத்தி
செய்யும் விகாரமெல்லாம்
தூயதென அந்தப் பூமியாக்கித் தமிழ்த்
துன்பம் களைந்துவிடு
நீயும்வந்து கேளா விட்டுவிட்டால் நீதி
கேட்பது யார்தானிங்கு

பாரதப்போர் ஒரு பாவைதிரௌபதியின்
சேலை பறித்ததனால்
நூறு எனப்பல திரௌபதிகள் இன்று
சேலையிழந்து நின்றார்
ஓருடைபோக இன்னொன்றிதோவென
மாதவன்கை கொடுத்தான்
ஆருயிர் தங்கையர் கேட்டுக்கதறியும்
சேலைகள் நீண்டதில்லை

மாதவன் போலொரு ஆதவன் மானமே
காத்திடத் தானெழுந்தான்
பாதகன் பக்கம் பலங்கொடுத்துத் தமிழ்ப்
பூமியை யேன்பறித்தார்
நீதி மறைந்தது நீசர் எழுந்தனர்
நெஞ்சழ மங்கையரோ
பாதி உயிருடன் போதைக் கொண்டோர்
தமக்கோர் உணவாவதென்ன?

சாக நினைத்துயிர் போகும்வழி யின்றி
சேயிழை யார்துடித்தே
வேகு முடலவமானம் கொண்டே யவர்
விழிகள் நீர்தழும்ப
பாவிமகனவர் காலடி வீழ்ந்துடல்
நோகத் துடிப்பதனை
கூவியழும்குரல் ஓலம்நிறுத்திட
வானளவாய் எரியாய்

ஊனை விட்டு உயிர் போவதனாலேயே
வேதனை தீருமென
உண்ணு முணவினில் ஓர்துளி நஞ்செனும்
ஊற்றித் தருவினரோ
தின்னும் கவளமும் தொண்டை நடுவினில்
சிக்கித்திணறிடுமோ
கண்ணும் உறங்கிடக் காலன்வந்து உயிர்
கொள்ளவும் மாட்டானோ?

என்று கலங்கி மயங்கிச் சிறைதனில்
வெம்பி அழுதுகொள்ளும்
நல்ல வர்காத்திட நாடெங்கும் பற்றியோர்
நாசம் எரிக்காயோ
பூமி யெரித்தது அன்று முடிந்தது
போகட்டும் விட்டுவிடு
பாழும் மனங்கொள்ளும், எண்ணமெரித்திடு

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

தமிழியக்கம் - வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு


ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்
முன்னேற்றம் ஒவ்வொன்றும்
உன்முன் னேற்றம்!

கண்டறிவாய்! எழுந்திரு நீ!
இளந்தமிழா, கண்விழிப்பாய்!
இறந்தொ ழிந்த

பண்டைநலம் புதுப்புலமை
பழம்பெருமை அனைத்தையும் நீ
படைப்பாய்! இந்நாள்

தொண்டுசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெ ழுந்தே!

உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில்
அடைகின்ற வெற்றியெலாம்
உன்றன் வெற்றி!

அயராதே! எழுந்திருநீ!
இளந்தமிழா, அறஞ்செய்வாய்!
நாம டைந்த

துயரத்தைப் பழி தன்னை
வாழ்வினிலோர் தாழ்மையினைத்
துடைப்பாய் இந்நாள்

செயல்செய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
சிறி வந்தே.

வாழியநீ! தமிழ்த்தாய்க்கும்
வரும் பெருமை உன் பெருமை!
வயிற்றுக் கூற்றக்

கூழின்றி வாடுகின்றார்;
எழுந்திருநீ! இளந்தமிழா
குறைத விர்க்க

ஆழிநிகர் படைசேர்ப்பாய்!
பொருள்சேர்ப்பாய்! இன்பத்தை
ஆக்கு விப்பாய்!

ஊழியஞ்செய் தமிழக்குத்
துறைதோறும் துறைதோறும்
உணர்ச்சி கொண்டே,

உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு
வருந்தீமை உனக்குவரும்
தீமை அன்றோ!

பிணிநீக்க எழுந்திருநீ
இளந்தமிழா, வரிப்புலியே,
பிற்றை நாளுக்

கணிசெய்யும் இலக்கியம் செய்!
அறத்தைச் செய்! விடுதலைகொள்
அழகு நாட்டில்!

பணிசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
பழநாட்டானே,

எதுசெய்ய நாட்டுக்கே
எனத்துடித்த சிங்கமே!
இன்றே, இன்னே,

புதுநாளை உண்டாக்கித்
தமிழ்காப்பாய் புத்துணர்வைக்
கொணர்வாய் இங்கே

அதிர்ந்தெழுக! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
அழகு காப்பாய்!

இதுதான் நீ செய்தக்க
எப்பணிக்கும் முதற்பணியாம்
எழுக நன்றே.

பாரதிதாசன்

காதல் மொழிகிறது


குடையின் ஆதரவில்
நம்மை விட்டு விட்டு
அத்தனையும்
நனைத்து போனது மழை!
காதலினால் கனன்ற காமம்
தீப்பிடிக்க சாம்பலானது
நாகரீக முகமூடி!

***************************

தோட்டத்து பூக்கள்
மழையில் குளித்தன!
காய்ச்சல் வந்ததெனக்கு
என் பார்வையில்
அவையெல்லாம் நீயானதால்!

***************************

பளீரென்ற மின்னல் வெளிச்சத்தில்
மனதில் வந்து போகிறதுன் முகம்!
சபிக்கிறேன் நான் மின்னலை
சற்று நீடித்தாலென்னவென்று?

***************************

உன் இதழ்களை கவனித்தவாறே
உரையாடுகிறேன் இப்போதெல்லாம்!
உதிர்க்கும் சொற்களில் எப்போதாவது
எனக்கான காதல் உதிராதாவென்று?

***************************

நீயும் நானும் தனித்திருந்த நேரத்தில்
நமக்குள் நிலவிய அசைவுகளற்ற மவுனம்
சொல்லாமல் சொல்லிப் போனது
நம் கண(ன)ம் பொருந்திய காதலை!

***************************

ஆழியில் வசிக்கும் சிப்பியானது
வானிலிருந்து மழைத்துளியொன்றை
உள்வாங்கி முத்தாக்குமாம்!
நீ தந்த முத்தமும் அதுபோலவே
வெட்கத்தை தின்று நம்முள்
காதலை கருவாக்கியது!

கயல்விழி சண்முகம்

அன்பென்றால் காதலா?


முகஸ்துதிக்கு முறுவலித்தால்
முழம் போட்டு பின் தொடர்ந்து
முழுவதுமாய் அளந்து
முழுதாய் விலை பேசி
முகவரி கேட்கின்றாய்
புன்னகைக்கு விலையேது? பெண்ணை
புண் நகை செய்யாதே!

அன்பைக் கொட்டிப் பேசினால் காதலை
அள்ளி விடும் கண்ணன்களே!
‘அங்கே’ அவளுக்கு நீங்கள் அல்லவா?
பெண்கள் இதயமெல்லாம்
உனக்குள் என்று தொடத்துடிக்கும்
நீங்கள் கண்ணா!

இளமையை ஏன்?
விலையாக்கின்றீர்கள்
‘அவளுக்கு’ ஒருவனாய் வாழ்ந்தால்
அது சுகம்
ஆயிரத்தில் ஒன்றாக ஆசை வைக்காதீர்
பேச்சுக்கள் மட்டும் பெரிதல்ல...
பெண்மை என்பதெல்லாம்
உனக்கு மட்டுமா?
கன்னிகளின் உள்ளங்களை
காயப்படுத்தாதீர்

நன்றி: பீஷான் கலா

கண்ணீரில் கரையும் தலையணைகள்





























கண்ணீரில் கரையும் தலையணைகள்
கணத்திற்குக்கணம் காந்தவலையுளே பதிந்து நீந்தும்
கணக்கிலா இணையத் தகவல் மீன்களாய்
எல்லைகாணா மனவெளி முழுதும்
அழுந்தப் பதிந்த உன் குரலொலிகள்

சொர்க்கமே! உனை
பாலிக்க வேண்டிய பொழுதுகளில்
ஏனெனக்கு இன்னுமோர் பணியும்
அதற்கான பயில்வுகளும்?

ஊட்டமுடியாத தொலைதூரமதில்
ஒரு நெடுநாட்துயர்போலே
இறுகிக்கிடக்குதென் கலங்களுள்ளே
உனக்கேயான திருவமுது

சொந்தங்களில்கூட எந்தப் பெண்மையுமே
எனக்கீடாய் உனக்கில்லையென்றே
உணர்ந்திருந்துங்கூட
நாட்களாய்………!
வாரங்களாய்………!
மாதங்களாய்………!
விலகியிருக்கின்றேனே இனிக்குமுந்தன் இதழ்முத்தமிழந்து.

கற்பூரதீபமே! வேண்டுமானால்
இக்கலாசாலை விடுதிக் கட்டில் தலையணைகளைக்கூடக்
கேட்டுப்பார்! என்
கண்ணீர்ச்சூட்டிலவை கரைந்துபோன கதைசொல்லும்.
நிலாக்குஞ்சே!

நீயென்ன அடியிறுகிய ஆதி உயிரியா?
ஆயிரந்திரி நனைக்கும் ஜதரோக்காபனுக்காய்
தனிமைப்பொறியிட்டு உனை நானும்
உருக்கிப் பிழிகின்றேனே!

அந்திநேரச சூரியனாய் அடிவானச்சுக்கிரனாய்
பூரணைச்சந்திரனாய்………
பூமகளேயென் மனவான்முழுதும்
நீயேதான் ஜொலிக்கிறாய்!
என்றாலும் என்னவளே!
என்னால் நீயிழந்த இருவருட வாழ்க்கையினை
எதனைத்தந்து நானும் மீளநிரப்ப!