புதன், 30 ஜூன், 2010

என் மனதில் என்றும் நீங்காதிருக்கும்

என் மனதில் என்றும் நீங்காதிருக்கும்
என்றும் அழியாப் புகழுடைக் கவிஞன்
எங்கும் எதிலும் கவியாய் வாழும்
என் ஞானக்குருவே கண்ணதாசா !
தமிழென் உள்ளத்தைத் தாலாட்ட
தங்கப்பாடல்கள் தந்தவன் நீ
தமிழின் பெருமை ஓங்கி உயர
தமிழாய் சுவாசத்தில் நிறைந்தவன் நீ
ஓடி ஓடிக் களைத்து இன்றெனக்கு
ஓய்வு வேண்டும் என நெஞ்சு கேட்கையில்
இதமாய் வருடிக்கொடுத்து தாலாட்டுது உன்
இனிமையான பாடல்கள் என்னுள்ளத்தை
கற்றது கையளவு புவியில் நாம்
கல்லாதாது கடலளவு என்றாள் மூதாட்டி
கற்ற அனுபவங்கள் அனைத்தையும்
கக்கினாய் மற்றவர் வாழ்வை உணரவே !
நாட்டு எல்லைகள் கடந்ததைய்யா
நல்ல உன் கருத்தான பாடல்கள்
நானிலத்தில் தமிழால் அனைவரும்
நண்பராய் வாழ வேண்டுமய்யா
உள்ளத்தை உறவுகள் மாறி மாறி
உடைத்த வேளைகளில் எல்லாம்
உயிரை நண்பர்கள் துவைத்த வேளைகளில்
உரமாய் எனக்கு துணையானது உன் பாடல்களே
நீ வாழ்ந்த காலங்கள் கொஞ்சம் தான்
நீங்காத தடங்களாய் நீ விட்டுச் சென்ற
நினைவகலாப் பாடல்கள் கவிதைகள்
நித்திய ஞாபக ஆராதனை உனக்கு
ராமன், இயேசு, அல்லா என அனைவரும்
அகிலத்தில் சமனெனப் பாடி நீ
அடைந்தது தேசிய விருதே ! மறவோம்
அனைவரும் நீ சொன்ன உண்மையை
கவிதைகளின் தாசனே தமிழின் நேசனே
கண்டோம் அடுத்தொரு நினைவுநாள்
கணோம் உன்போல் கவி இனியொருநாள்
காத்திருப்போம் உன் நினைவுகளை எந்நாளும்
உனது ஆசி வேண்டி இங்கொரு தம்பி
உனது பாதங்களில் தலைவைத்து
உன்நினைவுநாளில் வணங்குகிறேன்
உன் ஆசியால் அன்புடன் தமிழ்பூத்து குலுங்கட்டும்

திங்கள், 28 ஜூன், 2010

நான் பைத்தியம்தானடா..

என்னை காதலிகிறேன் என்று சொல்லி கரம் பிடித்தவனே
இன்று என்னை நட்ட நடு வீதியில் தவிக்க விட்டு
நீ மட்டும் எப்படி சந்தோசமாய் இருக்கிறாய்
உன்னால் மட்டும் எப்படி முடிகிறதுடா
பதிலை சொல்லடா எனக்கு...?

நான் உன்னை காதலித்தது பாவாமா..?
இல்லை உன் நினைவால் தினம் தினம்
நான் தவிப்பது பாவாமா... ?
நீதான் வேண்டும் வேண்டும் என்று
உந்தன் பின்னால் அலைவதா...?
எதடா நான் செய்த பாவம்...?

காலம் மாறும் என் காதலும் ஜெயிக்கும் என்ற
நம்பிக்கையில் வாழ்க்கை பாதையில்
போராடி கொண்டு இருக்கிறேன்
என் போராட்டத்துக்கு முடிவேயில்லையா

காலங்களோடு போராடுகின்றேன்..
காத்திருப்போடு தவிக்கிறேன்..
காயப்பட்ட உள்ளம்
கண்களில் காணல் நீராய் தினம் தினம்
கண்ணிர்த் துளிகள் வடிகின்றது ..

என்னை பைத்தியக்காரி என்கிறாய்
நான் பைத்தியம் தானாடா என்னை தூக்கி எறியும்
உன்னை தேடித்தேடி அலைகிறேனே
நான் பைத்தியம்தானடா..

கண்ணகி மண்ணிலிருந்து

ஏ மிலேச்ச நாடே!
எத்தனை கொடுமைகள்
செய்து விட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...

எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்த்தாயிற்று...
எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று
மிச்சம் உண்டு என்னிடம்...


பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
கலைந்த கூந்தலோடும்
வயிறெரிந்து இதோ விடுக்கிறேன்...
கண்ணகி மண்ணிலிருந்து
ஒரு கருஞ்சாபம்!


குறள்நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்து விட்டாய்!
இனி நீ வேறு, நான் வேறு!


ஏ மிச்ச நாடே!
ஆயுதம் கொடுத்து, வேவுவிமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போட வைத்த உன்
தலை சுக்கு நூறாகச் சிதறட்டும்!


ஒரு சொட்டுத் தண்ணீருக்காக விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!


மழை மேகங்கள் மாற்றுப்பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒருபிடிச் சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்...
இனி உன் காடு கழனிகளெல்லாம்
கருகிப் போகட்டும்!


தானியங்களெல்லாம் தவிட்டுக் குப்பைகளாக
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களைத் துரத்தினீர்கள்
உங்கள் மலைகளெல்லாம்
எரிமலைக் குழம்புகளைக் கக்கி
சாம்பல் மேடாகட்டும்!


இரக்கமின்றி ரசாயனக் குண்டுகள்
வீசிய அரக்கர்களே...
உங்கள் இரத்தமெல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெல்லாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து எந்நேரமும்
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!


தெருக்களெல்லாம் குண்டு வெடித்து
சிதறிய உடம்புகளோடு
சுடுகாட்டு மேடாகட்டும்!
போர்நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்று வைக்கட்டும்!


வாய்திறந்தாலே இரத்தவாந்தி கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகளின் மீது
ஏறி அமர்ந்து அரசாட்சி செய்தவர்களே...
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!


நிர்வாணமாக எங்களை நடக்கவிட்டவர்களே...
உங்கள் தாய்தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடை கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில்
பெருமின்னல், பேரிடி இறங்கட்டும்!


எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!


நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடிநரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல்பூண்டு முளைக்காது போகட்டும்...


அலைபேரலையாய் பொங்கியெழுந்து அத்தனையும்
கடல் கொண்டு போகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்.

-தாமரை-

நரைத்தும் மறக்காத பொழுதுகள்; காதல்!


குழந்தைகள்
அன்பான மனைவி
நல்ல குடும்பமெனும் பெயருக்கு மத்தியில் மட்டும்
எப்படி மறப்பதோ உன் நினைவை,

இதயம் சுட்டு சுட்டு
வலிக்கும் உன் ஞாபாகமும் பார்வையும்
எனக்குள் மட்டுமே கனத்துக் கழியும்
இக்காலம் -
எப்படியேனும் தீர்ந்தேனும் போகாதா,

என்றோ காதலித்தோம்
இரண்டு வீட்டின் நன்மைக்காய்
பிரிந்தோம் -
பிரிந்திப்படி உயிர்தின்று வாழ
எப்படி சம்மதித்துக் கொண்டோமோ;

உலகமெலாம் சுற்றுகிறேன்
வருடங்கள் பலதை
வயதால் விழுங்கி விட்டேன்
நரை தட்டியும் போகலாம் - உன்
நினைவொழித்த பாடில்லையே;

நீ நடந்து வந்த சப்தம்
எனை அழைத்த ஜாடை
பேசிய விழிகள்
தொட்டுப் பார்த்த உணர்வு
எனக்காய் காத்திருந்த தவிப்பு
பிரிகையில் அழுத அழை; அழை; அழை....

எப்படி மறகுமோ என்; நெஞ்சே...????

வயதறியாத வேகம்
எதையோ தியாகம் செய்வது போன்ற எண்ணம்
வேறு வழி தெரியாத முடிவு
இப்பிரிவின் வலியை -
அன்றறிய சாத்தியமில்லாத தருணம்
இப்படித் தான் கொள்கிறதா உன்னையும்???

எனை உயிராய் சுவாசிக்கும் மனைவி
உனை பற்றி கேட்டு விமர்சிக்கும்
பிள்ளைகளுக்கு சொன்னளவு கூட
உன் மேல் வைத்திருந்த அன்பை -
உன்னிடம் சொல்ல முடியாமல் போனதே
வருட காலமாய் வலிக்கிறது போல்;

பாடல் கேட்க கொள்ளாத பொறுமை
ஒரு படம் பார்க்க ஒதுக்காத நேரம்
சிரித்துப் பேச கூட இல்லாத மனம்
அத்தனைக்கும் காரணம் -
நீயென்று சொல்லி
நான் யாருக்குப் புரிய வைத்து
வேறென்ன நிகழ்ந்துவிடும் இனி??

சோகமாய் அமர்ந்தால்
ஓரிரு வார்த்தையில் -
'குடும்பம் ஆச்சி, குழந்தைகள் இருக்கு..,
மறந்துடு; அவ்வளவு தான்' -
என்று சொல்பவர்களுக்கு
நீயென்பதோ நானென்பதோ
புரியாத; ஒற்றை வார்த்தை 'காதல்' மட்டுமே!

காதலித்தால் மறுக்கும் சமூகம்
நினைத்து அழுதால் கண்தொடைக்க
இயலாத மனிதர்கள்
பிரிக்க மட்டும் கொண்டு வரும் நியாயத்தில்
இனியாவது -
ஜாதியையும் மதத்தையும் ஏற்றத் தாழ்வையும்
நம்மை போன்றோரை பார்த்தாவது
அகற்றிக் கொள்ளட்டும்.

அன்றும் இன்றும்
மனதை மட்டும் அப்படியே
வைத்துக் கொண்டு
வெறும் மனிதர்களை கடந்து
நாட்களை கடந்து
வாழாத பொழுதுகளாய் வெற்றிடம் கொள்கிறதே
வாழ்க்கை; யார் காரணமாவார்???

இதோ, போகட்டும் பிதற்றல். என
முடித்துக் கொள்கிறேன்,
அழும் மனதோடு உதட்டை விரித்து
சிரித்துக் கொள்கிறேன்,
இன்னும் நூறு வருடம் வாழ
என் சுற்றத்திற்காய் - எல்லாவற்றையும்
தாங்கிக் கொள்கிறேன்,
யாரேனும் கேட்டால் நலம் என்றே
சொல்லிவிடுகிறேன்,
நீயும் அப்படியே சொல்;
நம்பிக் கொள்ளட்டும் உலகம்!!

சனி, 26 ஜூன், 2010

மேய்ச்சல் தரைகளில் குண்டுகள் காத்திருந்தன.

சிலவேளை மாடுகள்
பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம்.

மேய்ச்சல் தரைகளில்
குண்டுகள் காத்திருந்தன.

மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள்.
மிஞ்சியிருக்கும் இரண்டு
மாடுகளின்
சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன.

மாதாவின் தலை
அவளது கைகளுக்கு
எட்டாமல் விழுந்திருக்கிறது.
மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்.
தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில்
வாழுகிற மாடுகளாயிருந்தன.
தடைசெய்யப்பட்ட
குழந்தைகளுக்கு பால் கொடுத்திருந்தன.

ஒரு குழந்தை
வாய்க்காலில் மறைந்து
தப்பியிருக்க
மாட்டுக்கன்றுகள்
பால் காயு முன்பாகவே
இறந்து கிடக்கின்றன.

கொம்பு முளைத்த மாடுகளிடம்
எந்தத்துவக்குகளும் இல்லை.
இராணுவ உடைகளையும்
அணிந்திருக்கவில்லை.

வெடித்துச் சிதறிய குண்டு
மாடுகளை அள்ளி எடுத்த
பட்டியில்
துணைக்கு ஒரு நாய் மட்டும் நிற்கிறது.
சிதறிய சதைகளை
தின்ன முடியாதிருக்கும் மீறிய பலிகளில்
நாய் ஊளையிடுகிறது.

பாலுக்கு அழுகிற குழந்தை
தலை துண்டிக்கப்பட்டிருக்கிற
மாதாவை தேடுகிறது
இறந்த பசுவை
தேடுகிற கன்றினைபோல.
காயப்பட்ட உடல் பகுதியிலிருந்தும்
பட்டியிலிருந்தும்
மேய்ச்சலுக்காய் திரிந்த
தரைகளிலிருந்தும்
குருதிதான் பெருக்கெடுக்கிறது.

மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்?
பசுக்கள் குழந்தைகளுக்கு
பாலினை கொடுத்தது
பெருந்தவறு என்கிறது பராசூட் கொத்தணிக்குண்டு.

வாய்களை மீறி
மாடுகளிடம் அழுகை வருகிறது.
அவைகள் எதையும் பேசப்போவதில்லை?
குண்டுகளோடும்
கட்டளையிடுகிற இராணுவத் தளபதிகளோடும்
அதிகாரத்தோடும்?

மாதாவிடமும் எந்த
திருச்சொற்களும் இல்லை.
மாதாவும் மாடுகளும்
வாய்பேசாத பிராணிகளாகவே இருக்க
மேய்ச்சல் தரைகளில்
மேலும் பல குண்டுகள் காத்திருந்தன.

கவிஞர். தீபச்செல்வன் எழுதியது

வெள்ளி, 25 ஜூன், 2010

கல்லறையின் பயங்கரத்தை எனக்களிக்கவும்

அன்பான சடலங்களே!
நீங்கள்தான் ஒரு காலத்தில் எனது தாயகத்தின்
நம்பிக்கையாய் விளங்கினீர்கள்
சிதைவுறும் உங்கள் எலும்புகளின் துகள்களை
என் நெற்றியில் இடுங்கள்!
உங்கள் குளிர்ந்த கரங்களால்
எனது இதயத்தை தொடுங்கள்!
எனது காதுகளில் ஓங்கி அரற்றுக!
எனது முனகல்கள் ஒவ்வொன்றும்
இன்னுமொரு கொடுங்கோலனின்
கண்ணீராக மாறும்!
என்னை சூழ்ந்திடுங்கள்!
உங்கள் உணர்வுகளை
எனது ஆத்மா உள்வாங்கவும்
கல்லறையின் பயங்கரத்தை எனக்களிக்கவும்
என்னைச் சுற்றித் திரியுங்கள்!
இழிவான அடிமைத்தனத்தில்
ஒருவன் வாழும்போது
கண்ணீர் துளிகள் மட்டும் போதா!