ஞாயிறு, 22 மே, 2011

ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்

வேல்தர்மா
thanks Lankasri

ஊமைகள்
மின்சாரமில்லா வானொலிப் பெட்டி
அதிகாரமில்லா தமிழர்கள்
வாயில்லாப் பிறவிகள்

தாபம்
உணர்வுப் பட்டறையின்
வெப்பம் வெளியே வந்தது
கன்னியவள் மூச்சு

மறுவாழ்வு
வெள்ளாடை விதைவை
பட்டுச் சேலை உடுத்தினாள்
வானவில்

வாழ்க்கை
வாழ்கிறாள் அவள் எனக் கூற
தன் வாழ்விழந்தது
மல்லிகைப் பூ


அதிட்டக் கட்டை
வாழ்கிறாள் அவள் எனக் கூற
தன் வாழ்விழந்தது
மல்லிகைப் பூ

கொள்கை(ளை)
மகன் சாகட்டும்
மருமகள் தாலி அறட்டும்
இந்திய வெளியுறவுக் கொள்கை

எழும்பியது
பொறுமை இடறி விழுந்தது
இடறு பட்ட மிருகம்
கோபம்

சிசுக்கொலை
தமிழீழம் பெண் குழந்தையா
முள்ளிவாய்க்காலில் கொடுத்தனர்
கள்ளிப் பால்

பெயரென்ன?
பாதுகாப்பு வலயத்தில்
பலியானோர் எண்பதாயிரம்
நாமம் கரணம்

செய்வன திருந்தச் செய்
வந்து செய்தது சரியில்லை
மீண்டும் வருவார்
கடவுள் அவதாரம்

எங்கே எந்தன் தேவதை

எங்கே எந்தன் தேவதை

த.தர்ஷன்
thanks Lanka sri

எங்கே எந்தன் தேவதை
எங்கே எந்தன் தேவதை
கண்ணில் வந்த நாள் முதல்
கண்ணீர் தந்து பார்க்கிறாள்
எங்கே எந்தன் தேவதை

கண்ணால் பேசினாய் மனசை தீண்டினாய்
காதல் தானடி காதல் தானடி
காதல் வந்ததால் கவியன் ஆகினேன்
கவிதை தானடி கவிதை தானடி

எனக்கென இருந்தது ஒரு நிழலு -அது
உனைக்கண்டு தொடர்ந்தது தெரியாதா?
உனக்கென இருந்தது ஒரு பெயரு -அது
என்னுயிரில் புதைந்தது புரியாதா?

நீ பிரிந்தாலும் மண்ணில் இணைந்தாலும்
எந்தன் உசிரு உன்னை சேருமடி
வானில் தோன்றினாய் வாழ்வை திருடினாய்
இதயம் தானடி இதயம் தானடி

கனவில் பேசியே காலம் கழிக்கிறேன்
நினைவில் தானடி நினைவில் தானடி
உயிரில் உன்முகம் தீட்டுகிறேன்
உதிரமும் அழைப்பது கேட்கிறதா?

ஊர் உன்னை சேர்வதை எதிர்த்தாலும்
உன்னை விட வேறிங்கு இல்லையடி
நீ பறந்தாலும் என்னை மறந்தாலும்
நீ தான் எந்தன் ஒரு நினைவு

தேசக் காதல்

யூலியட் இறக்கவில்லை
நடித்திருந்தாள்.
ரோமியோ அறியவில்லை
இறந்துவிட்டான்.
யூலியட் அறிந்துபின்
இறந்துவிட்டாள்.
“இருவரும் இறக்கவில்லை
விதைக்கப்பட்டார்கள்”
எழுதிவைத்தான் சோக்கிரட்டீஸ்
காதலுக்காய் உயிரைவிடுதல்
காவியம் என்று.

ரோமியோ! யூலியட்!
உருகி வழிகிறது
உலகம் முழுதும்
ஒன்றுக்கு பதிலாய்
பல நூறாயிரமாய்

நாமும் காதலித்தோம்.

இதயச்சுவர்களில்
ஈரமாய் எழுதினோம்.
ஊர்காற்று முழுதும்
ஓலை அனுப்பினோம்.

காது மடல்களில்
கானம் இசைத்தோம்.
மூக்கு முட்டிச்
சுவாசித்தோம்.
இதழ்களால்
இறுகப் பற்றினோம்.
கண்கள் முழுதும்
நிறைத்தோம்.
ஒரு கோப்பையில்
உண்டோம்.

காலடிச் சுவடுகளில்
கால்வைத்து நடந்தோம்.

அவள் ஒளியில்
அவள் தந்த சுகத்தில்
அவள் காட்டிய அரவணைப்பில்
ஆனந்தாமாய் இருந்தோம்.

காதல்..! காதல்…!
இனிதாய்தான் பருகினோம்.

ஆனால்
எங்களை
நிஐமாய் நேசித்தவளை
சாகடிக்கும் போது
நாமும் இறந்துவிட்டோம்.

எங்களுடைய
சாவுக்கு யாரும்
வருத்தப்படவில்லை.

எங்கள் காதலை
காவியமாய்
யாரும் இன்றுவரை எழுதவில்லை.

நாம் இத்தாலியில் பிறக்கவில்லை
எங்கள் வீதிகளில்
வெரோனாவின் வாசம் இல்லை
என்பதாலோ தெரியவில்லை.

வல்லவர்களே!
நீங்கள் ஒட்டிய
பயங்கரவாத முத்திரைகளுடன்
உங்கள் வாசல்களில்
வந்து நிற்கும்
எங்கள் உறவுகள் சொல்லுவார்கள்.
எங்கள் காதலை

ஒருநாள்
உங்களுக்கு
மனச்சாட்சி வந்தால்
அவர்கள் சொல்வதையும்
கேளுங்கள்.

எங்களையும் எழுதுங்கள்.
பெரும் காவியமாய்
அல்லாவிட்டாலும்

நாங்களும் காதலுக்காக
உயிரை விட்ட
மானசீக காதலர்களே!
என்ற
பேர் உண்மையை
உலகம் அறியப்போதுமான
“நாம் பயங்கரவாதிகள் அல்ல”
என்ற
சிறு குறிப்பை மட்டும்...!


ரவி இந்திரன்