வெள்ளி, 10 செப்டம்பர், 2010

இலங்கை எரித்த தீயே..

சீதை கரங்கொண்டோன் தூதன் அனுமந்தின்
வாலினில் பற்றிய தீ
தூதைப் பழித்திடக் கோபங் கொண்டேயிந்த
தீவை அழித்துநின்றாய்
மாதைத் தமிழ்ச்சிறு மங்கை மானமழித்
தாடிக் குதிப்பவர்கள்
நீதிகேட்டே யவர் நீசர்கள் பூமியை
மீண்டும் எரிப்பாயோ?

ஆளும் மன்னன் கொடுங்கோலன் என்றேநீதி
கேட்க மதுரையிலும்
காலிற் சிலம்புகை கொண்டவள் கண்ணகி
சொல்ல எரித்தொழித்தாய்
பாழு மரசொன்று நீதியின்றிக் கொடுங்
கோல்கொண்டு நிற்குதிங்கு
தீயே மறைந்து நீ நின்றது போதுஞ்
சினங்கொண்டழித்துவிடு

போரில் பகைவென்று பூவையர் கூட்டமாம்
பேசும்தமிழ்க் குலத்து
நேரின்று தாவென்று வாழக்குரலீந்த
வஞ்சியர் தம்மையின்று
வாரி இழுத்தொரு பாசறைக் கூட்டுக்குள்
வைத்துச்சி தைத்தவரை
கீறிக் கிழித்துமெய் கெட்டழித்துக்
கூத்தாடுது பேய்களின்று

வந்தே யெரித்து ஒழித்துவிடு அந்தவன்மை
மனங்களெல்லாம்
வெந்த மனங்களின் பேய்பிடித்தபுத்தி
செய்யும் விகாரமெல்லாம்
தூயதென அந்தப் பூமியாக்கித் தமிழ்த்
துன்பம் களைந்துவிடு
நீயும்வந்து கேளா விட்டுவிட்டால் நீதி
கேட்பது யார்தானிங்கு

பாரதப்போர் ஒரு பாவைதிரௌபதியின்
சேலை பறித்ததனால்
நூறு எனப்பல திரௌபதிகள் இன்று
சேலையிழந்து நின்றார்
ஓருடைபோக இன்னொன்றிதோவென
மாதவன்கை கொடுத்தான்
ஆருயிர் தங்கையர் கேட்டுக்கதறியும்
சேலைகள் நீண்டதில்லை

மாதவன் போலொரு ஆதவன் மானமே
காத்திடத் தானெழுந்தான்
பாதகன் பக்கம் பலங்கொடுத்துத் தமிழ்ப்
பூமியை யேன்பறித்தார்
நீதி மறைந்தது நீசர் எழுந்தனர்
நெஞ்சழ மங்கையரோ
பாதி உயிருடன் போதைக் கொண்டோர்
தமக்கோர் உணவாவதென்ன?

சாக நினைத்துயிர் போகும்வழி யின்றி
சேயிழை யார்துடித்தே
வேகு முடலவமானம் கொண்டே யவர்
விழிகள் நீர்தழும்ப
பாவிமகனவர் காலடி வீழ்ந்துடல்
நோகத் துடிப்பதனை
கூவியழும்குரல் ஓலம்நிறுத்திட
வானளவாய் எரியாய்

ஊனை விட்டு உயிர் போவதனாலேயே
வேதனை தீருமென
உண்ணு முணவினில் ஓர்துளி நஞ்செனும்
ஊற்றித் தருவினரோ
தின்னும் கவளமும் தொண்டை நடுவினில்
சிக்கித்திணறிடுமோ
கண்ணும் உறங்கிடக் காலன்வந்து உயிர்
கொள்ளவும் மாட்டானோ?

என்று கலங்கி மயங்கிச் சிறைதனில்
வெம்பி அழுதுகொள்ளும்
நல்ல வர்காத்திட நாடெங்கும் பற்றியோர்
நாசம் எரிக்காயோ
பூமி யெரித்தது அன்று முடிந்தது
போகட்டும் விட்டுவிடு
பாழும் மனங்கொள்ளும், எண்ணமெரித்திடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக