ஞாயிறு, 22 மே, 2011

தேசக் காதல்

யூலியட் இறக்கவில்லை
நடித்திருந்தாள்.
ரோமியோ அறியவில்லை
இறந்துவிட்டான்.
யூலியட் அறிந்துபின்
இறந்துவிட்டாள்.
“இருவரும் இறக்கவில்லை
விதைக்கப்பட்டார்கள்”
எழுதிவைத்தான் சோக்கிரட்டீஸ்
காதலுக்காய் உயிரைவிடுதல்
காவியம் என்று.

ரோமியோ! யூலியட்!
உருகி வழிகிறது
உலகம் முழுதும்
ஒன்றுக்கு பதிலாய்
பல நூறாயிரமாய்

நாமும் காதலித்தோம்.

இதயச்சுவர்களில்
ஈரமாய் எழுதினோம்.
ஊர்காற்று முழுதும்
ஓலை அனுப்பினோம்.

காது மடல்களில்
கானம் இசைத்தோம்.
மூக்கு முட்டிச்
சுவாசித்தோம்.
இதழ்களால்
இறுகப் பற்றினோம்.
கண்கள் முழுதும்
நிறைத்தோம்.
ஒரு கோப்பையில்
உண்டோம்.

காலடிச் சுவடுகளில்
கால்வைத்து நடந்தோம்.

அவள் ஒளியில்
அவள் தந்த சுகத்தில்
அவள் காட்டிய அரவணைப்பில்
ஆனந்தாமாய் இருந்தோம்.

காதல்..! காதல்…!
இனிதாய்தான் பருகினோம்.

ஆனால்
எங்களை
நிஐமாய் நேசித்தவளை
சாகடிக்கும் போது
நாமும் இறந்துவிட்டோம்.

எங்களுடைய
சாவுக்கு யாரும்
வருத்தப்படவில்லை.

எங்கள் காதலை
காவியமாய்
யாரும் இன்றுவரை எழுதவில்லை.

நாம் இத்தாலியில் பிறக்கவில்லை
எங்கள் வீதிகளில்
வெரோனாவின் வாசம் இல்லை
என்பதாலோ தெரியவில்லை.

வல்லவர்களே!
நீங்கள் ஒட்டிய
பயங்கரவாத முத்திரைகளுடன்
உங்கள் வாசல்களில்
வந்து நிற்கும்
எங்கள் உறவுகள் சொல்லுவார்கள்.
எங்கள் காதலை

ஒருநாள்
உங்களுக்கு
மனச்சாட்சி வந்தால்
அவர்கள் சொல்வதையும்
கேளுங்கள்.

எங்களையும் எழுதுங்கள்.
பெரும் காவியமாய்
அல்லாவிட்டாலும்

நாங்களும் காதலுக்காக
உயிரை விட்ட
மானசீக காதலர்களே!
என்ற
பேர் உண்மையை
உலகம் அறியப்போதுமான
“நாம் பயங்கரவாதிகள் அல்ல”
என்ற
சிறு குறிப்பை மட்டும்...!


ரவி இந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக