ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

காதல் மொழிகிறது


குடையின் ஆதரவில்
நம்மை விட்டு விட்டு
அத்தனையும்
நனைத்து போனது மழை!
காதலினால் கனன்ற காமம்
தீப்பிடிக்க சாம்பலானது
நாகரீக முகமூடி!

***************************

தோட்டத்து பூக்கள்
மழையில் குளித்தன!
காய்ச்சல் வந்ததெனக்கு
என் பார்வையில்
அவையெல்லாம் நீயானதால்!

***************************

பளீரென்ற மின்னல் வெளிச்சத்தில்
மனதில் வந்து போகிறதுன் முகம்!
சபிக்கிறேன் நான் மின்னலை
சற்று நீடித்தாலென்னவென்று?

***************************

உன் இதழ்களை கவனித்தவாறே
உரையாடுகிறேன் இப்போதெல்லாம்!
உதிர்க்கும் சொற்களில் எப்போதாவது
எனக்கான காதல் உதிராதாவென்று?

***************************

நீயும் நானும் தனித்திருந்த நேரத்தில்
நமக்குள் நிலவிய அசைவுகளற்ற மவுனம்
சொல்லாமல் சொல்லிப் போனது
நம் கண(ன)ம் பொருந்திய காதலை!

***************************

ஆழியில் வசிக்கும் சிப்பியானது
வானிலிருந்து மழைத்துளியொன்றை
உள்வாங்கி முத்தாக்குமாம்!
நீ தந்த முத்தமும் அதுபோலவே
வெட்கத்தை தின்று நம்முள்
காதலை கருவாக்கியது!

கயல்விழி சண்முகம்

அன்பென்றால் காதலா?


முகஸ்துதிக்கு முறுவலித்தால்
முழம் போட்டு பின் தொடர்ந்து
முழுவதுமாய் அளந்து
முழுதாய் விலை பேசி
முகவரி கேட்கின்றாய்
புன்னகைக்கு விலையேது? பெண்ணை
புண் நகை செய்யாதே!

அன்பைக் கொட்டிப் பேசினால் காதலை
அள்ளி விடும் கண்ணன்களே!
‘அங்கே’ அவளுக்கு நீங்கள் அல்லவா?
பெண்கள் இதயமெல்லாம்
உனக்குள் என்று தொடத்துடிக்கும்
நீங்கள் கண்ணா!

இளமையை ஏன்?
விலையாக்கின்றீர்கள்
‘அவளுக்கு’ ஒருவனாய் வாழ்ந்தால்
அது சுகம்
ஆயிரத்தில் ஒன்றாக ஆசை வைக்காதீர்
பேச்சுக்கள் மட்டும் பெரிதல்ல...
பெண்மை என்பதெல்லாம்
உனக்கு மட்டுமா?
கன்னிகளின் உள்ளங்களை
காயப்படுத்தாதீர்

நன்றி: பீஷான் கலா

கண்ணீரில் கரையும் தலையணைகள்





























கண்ணீரில் கரையும் தலையணைகள்
கணத்திற்குக்கணம் காந்தவலையுளே பதிந்து நீந்தும்
கணக்கிலா இணையத் தகவல் மீன்களாய்
எல்லைகாணா மனவெளி முழுதும்
அழுந்தப் பதிந்த உன் குரலொலிகள்

சொர்க்கமே! உனை
பாலிக்க வேண்டிய பொழுதுகளில்
ஏனெனக்கு இன்னுமோர் பணியும்
அதற்கான பயில்வுகளும்?

ஊட்டமுடியாத தொலைதூரமதில்
ஒரு நெடுநாட்துயர்போலே
இறுகிக்கிடக்குதென் கலங்களுள்ளே
உனக்கேயான திருவமுது

சொந்தங்களில்கூட எந்தப் பெண்மையுமே
எனக்கீடாய் உனக்கில்லையென்றே
உணர்ந்திருந்துங்கூட
நாட்களாய்………!
வாரங்களாய்………!
மாதங்களாய்………!
விலகியிருக்கின்றேனே இனிக்குமுந்தன் இதழ்முத்தமிழந்து.

கற்பூரதீபமே! வேண்டுமானால்
இக்கலாசாலை விடுதிக் கட்டில் தலையணைகளைக்கூடக்
கேட்டுப்பார்! என்
கண்ணீர்ச்சூட்டிலவை கரைந்துபோன கதைசொல்லும்.
நிலாக்குஞ்சே!

நீயென்ன அடியிறுகிய ஆதி உயிரியா?
ஆயிரந்திரி நனைக்கும் ஜதரோக்காபனுக்காய்
தனிமைப்பொறியிட்டு உனை நானும்
உருக்கிப் பிழிகின்றேனே!

அந்திநேரச சூரியனாய் அடிவானச்சுக்கிரனாய்
பூரணைச்சந்திரனாய்………
பூமகளேயென் மனவான்முழுதும்
நீயேதான் ஜொலிக்கிறாய்!
என்றாலும் என்னவளே!
என்னால் நீயிழந்த இருவருட வாழ்க்கையினை
எதனைத்தந்து நானும் மீளநிரப்ப!

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

இனியும் தமிழன் ஏமாறமாட்டான்

நிச்சயம் என்றேற்றால் சத்யன் உதிப்பான்
அபயம் என்றால் அமுதன் ஆதரிப்பான்
சமயம் பார்த்தால்சாய்ந்திட மாட்டான்
இதயம் மாய்ந்தால் சோர்ந்திட மாட்டான்

கப்பலெற்றி தரம் பிரிக்க சரக்காக இருக்கார்
துப்பு துலக்கி திறம்சோதிக்க நறுக்காகார்
தப்பல்ல விலக்க நனி கூற்றுக்களாகார்
குப்பையல்ல கழிக்க இனி பேச்சுக்கள் ஆற்றார்

தரணி பேச தமிழ் மணம் பரப்புவார்
சீரணி நெகிழ தமிழர் மனம் திறப்பார்
அணிதேசம் தமிழ்த் திணம் கூட்டுவார்
நாணி நிற்காமல் தமிழர் குணம் செப்புவார்

சபை கேட்க கவித்தமிழ் இசைப்பார்
இசை பாட புவி களி கொள்வார்
அவை நாடி கேள்வி கணை தொடுப்பார்
சுவை கூட்டி தமிழை தினம் வளர்ப்பார்

கண்ணாக தமிழை கட்டிக்காப்பார்
பண்ணாக அழகை மீட்டி இரசிப்பார்
பஞ்சாக உயிர்தமிழை ஆகாயத்தில் தூசாக்கார்
நெஞ்சார மெய்த்தமிழை நேயமுடன் நேசிப்பார்

ஏட்டுச்சுரக்காய் அல்ல தமிழர் எழுதி அழிந்திடார்
கட்டு மரக்கலமல்ல தமிழ் திசை மாறி சென்றிடார்
சிட்டுச்சிறகல்ல நொடித்தொடித்து வீழார்
பட்டுத்துகில் அல்ல உடுத்து கழைந்து விடார்

தவழ்ந்து தத்தி தமிழ் நடை பயில்வார்
மகிழ்ந்து ஏற்றி எழில் உடை அணிவார்
நுழைந்து காட்டி உலக ஏட்டில் இடம் பிடிப்பார்
கவிழ்ந்து வீழ்த்தினும் இமயமேட்டில் தடம் பதிப்பார்

உதிரம் கலந்து உயிர்த்த தமிழ் ஒழியார்
உதரம் எரிய துளைத்தால் தமிழர் கொதிப்பார்
கதையும் சாற்றி மறுத்தால் ஈவு பாரார்
எதையும் கூறி கிறங்க நாவில் சேரார்

மொழி தேன் மலரல்ல முகர்ந்திட மறந்திட மாட்டான்
தமிழ் தொனி பனியல்ல உணர்ந்திட மரத்திட மாட்டான்
தமிழ் பசுமை இலையல்ல உதிர்ந்திட உலர்ந்திட மாட்டான்
செம்மொழி இணையில்லா தமிழன் இனியும் ஏமாறமாட்டான்


- அருந்தா

வெள்ளி, 9 ஜூலை, 2010

தெரியாத என் காதல் பயணம்

உலகில் எத்தனையோ பெண்
இருக்க அவள் மீது மட்டும்
எனக்கு ஏன் காதல் மலர்ந்தது


அன்று நான் அடைந்த இன்பத்திற்கு
அளவில்லை இன்று
அவள் பிரிவின் துன்பத்திக்கு
காரணம் புரியவில்லை

பின் மரணத்தை நேசித்தேன்
அவள் என்னுடன் பேச மறுத்த
இந்த நேரத்தில்


அந்த மரணமும் கூட
என்னை ஏற்க்க மறுக்கிறது
காரணம் என்ன


தெரியவில்லை
விதியின் பயணமோ
முடியவில்லை

நானும் நம் காதலும்..!


எனை நீ- பிரிந்து
காலங்கள் பல கடந்தும்
உன்னைத் தேடியே
நான் இன்றும்
பயணித்துக்
கொண்டிருக்கிறேன்

என் உயிரில் சிதறிய
உன் நினைவுத்துளிகளில்
நான் நிதமும்
நனைத்து கொண்டிருக்கிறேன்!

இன்னமும் எனக்கு
பழக்கப்படவில்லை
உன் நினைவின்றி
வாழ்வதற்கு!

என் உயிரில்
வாழ்ந்து விட்டு
என் நிழலைக் கூட
நிராகரித்துச்
சென்றுவிட்டாய்!

வண்ணத்தை
தொலைத்த
வண்ணத்துப் பூச்சியாய்

உயிர் இருந்தும்
பொம்மையாய்
நானும் நம் காதலும்
தவித்து நிற்கிறோம்
தனித்து நிற்கிறோம்

என் நினைவுகளை
நீ-இன்று
உதறிவிட்டாலும்

என் உயிரிருக்கும் வரை
உன் நினைவில்
மட்டுமே
உயிர் வாழ்வேன்!

ஒருவேளை
நான் இறந்தாலும்
உன் நினைவோடுதான்
உயிரையும் விடுவேன்!!

வியாழன், 8 ஜூலை, 2010

த‌மிழ‌னுக்கு வேத‌னைக் கூட‌ம் சைனாவுக்கோ சோத‌னைக்கூட‌ம்..


விடிந்தால் ம‌டிவோமா?
இல்லை
ம‌டிந்தால் விடியுமா? யென‌
ம‌ர‌ண‌ அச்ச‌த்தின் மிச்ச‌மாய் நின்ற‌
ம‌க்க‌ள் வெள்ள‌ம்...

காட்டிக்கொடுத்த‌ த‌மிழ‌னின் வினையால்
காட்டிய‌ இட‌த்திற்கு வ‌ந்தான் த‌மிழ‌ன்
கூடிய‌ இட‌த்தில் வீழ்வான் த‌மிழ‌ன் யென‌
ராஜ‌ ப‌ட்சிக‌ள் மாமிச‌ம் திண்ண‌
வ‌ட்ட‌ம‌டித்த‌ சூட்ச‌ம‌ இட‌ம்....


கோடி செல‌வுக‌ள் செய்து த‌யாரித்த‌
உயிர்கொல்லி ஆயுத‌ம் உத‌வுமாயென்று
வ‌ல்ல‌ர‌சு நாடுக‌ள் அள்ளிக் கொடுக்க‌...
ப‌திலுக்கு க‌ருகிய‌ எம் ம‌க்க‌ளை வாரி கொடுத்த‌
த‌மிழ‌னுக்கு வேத‌னைக் கூட‌ம்
சைனாவுக்கோ சோத‌னைக்கூட‌ம்...

த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ ஆயுத‌திற்கு
அங்கு த‌டைக‌ள் இல்லை
த‌மிழ‌னை அழிப்பதே அவ‌ர்க‌ளின்
த‌லையாய‌ கொள்கை....


போர் ம‌ரபு கூறிய‌ முதியோர், சிறியோர்?
போர் ம‌ர‌பு மீறிய‌ குற்றுயிர் ம‌ர‌ண‌ம்
க‌ண்டும் காணாத‌ ஐநா சாச‌ன‌ம்
க‌ட்டிக் காத்து
காட்டி கொடுத்த‌து இந்திய‌ சீத‌ன‌ம்

ஆயிர‌க்க‌ண‌க்கில்
ம‌க்க‌ளைக் கொன்று
அழித்தொழித்த‌
முள்ளிவாய்க்காலில்
பெறுக்கெடுத்த‌ ம‌னித‌ரெத்த‌ம்
உல‌க‌த் த‌மிழ‌ர் நெஞ்சில் பாய்ந்து
வ‌ள‌ர்த்தெடுக்குது த‌மிழிழ‌த்தை...